Thursday, February 21, 2019

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை உதவிக்கு விசேட பொலிஸ் குழு

ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட திறமைகளுடன் கூடிய அதிகாரிகள் இந்த குழுவில் உள்வாங்கப்ப படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் உருவாக்கவுள்ள இந்த குழு, கடந்த நான்கு ஆண்டுகளில் இடம் பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும்.

இதனிடையே கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலனைக்குட்படுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஆனபோதிலும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் அதிகமானவை, ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவை என அதன் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆணைக்குழு, 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள், நம்பிக்கையை சீர்குலைத்தமை, சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, ஏமாற்றியமை, அதிகாரம், அரச சொத்துக்க​ள் மற்றும் சலுகைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, அரச சொத்துக்கள் மற்றும் வருமானங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தமை தொடர்பிலான உண்மைத்தன்மை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்

இது தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளிலும்,அனுப்பமுடியும்.
இதேவேளை, முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment