நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமேவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்காக சட்டமா அதிபரின் கருத்தை பெறவுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர், இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாகவும், இந்த வழக்கை மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக பிரதம நீதியரசரின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளதாகவும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் குறிப்பிட்டனர்.
அதற்கமைய, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி, நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட போது, விளையாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 5 கோடியே 35 இலட்சத்திற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment