யாழ்ப்பாணத்தில் தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு வயல்களிலிருந்தும், விரியன் பாம்புகள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வயல் நிலங்களை பெரும்பாலும் தமது விரும்பிய வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பாம்புகள் குறித்து, மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரியன் இனத்தினைச் சேர்ந்த இவ்வகை பாம்புகள், , மிகவும் விஷம் நிறைந்ததாகும். இரவில் தனது இரைகளைத் தேடி நெளிவதுடன், பகலில் சோம்பேறிபோல் சுருண்டு படுத்திருக்கும் தன்மையினை இவை கொண்டுள்ளன. வயல் அறுவடைக் காலங்களிலும் அறுவடைக் காலத்தின் பின்னரும், பெரும்பாலும் வயலில் தங்குவதையே இந்த பாம்புகள் விரும்புகின்றன. .
அதற்கான காரணம் வயலில் நெற் கதிர்களை வேட்டையாடுவதற்காக வரும் எலிகளையும், சேற்றில் தப்பி வாழும் தவளைகளையும் வேட்டையாடுவதற்காகும்.
இரையைக் கவ்விய பின்னர் தனது பல்லினூடாக கொடிய விஷத்தினை இரையின் உடலினுள் இந்த பாம்புகள் செலுத்துகின்றன. இதனையடுத்து இரை நிலை குலைந்து போய் அசைவற்றுக் காணப்பட்டதும், அந்த இரையை இவை முழுமையாகவே விழுங்கிவிடும்.
இதேவேளை இரவில் நடமாடும் இது போன்ற பாம்புகள் மனிதக் கால்களையும் இரையாக கருதுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பகலில் பார்வைத் திறன் குறைந்த இவ்வகையான பாம்புகளின் கண்களுக்கு, இரவில் அசையும் உயிருள்ள பொருட்கள் சிவப்பு கலந்த ஒரு நிறமாகத் தெரிவதாகவும், அதனால் மனிதர்களின் பாதங்களையும், இவை இரையாகவே கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக விஷப் பாம்புகள் தம்மைத் தீண்டினால் மட்டுமே, திருப்பிக் கொத்தும். ஆனால் இவ்வகையான பாம்புகள் இரையை தேடிச் சென்று தீண்டும் தன்மையுள்ளவை என கருதப்படுகிறது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் வயல் அறுவடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால், இவ்வாறான பாம்புகள் நெற்பயிர்களினிடையே பதுங்கிக் காணப்படும் என்பதுடன், பழுப்பு நிறமாக காணப்படுவதனால், வைக்கோலுக்கும் இதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் மிக குறைவாகவே காணப்படும்.
இதனால் வயலில் அறுவடை செய்வோர், மிகுந்த அவதானத்துடன் அறுவடை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment