Monday, February 4, 2019

நிதியமைச்சுடன் தொடர்புடைய இரு வர்த்தகர்களால் கொலை அச்சுறுத்தல்! சட்ட நடிவடிக்கைக்கு தயாராகின்றார் சார்ள்ஸ்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌன விரதம்.

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுங்க பகல்கொள்ளைக் கலாச்சாத்தையே பதவியேற்ற குறுகிய காலத்தினுள் மாற்றிப்போட்டார் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ்.
இவரது செயற்பாடு எற்றுமதி இறக்குமதி மாபியாக்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்திருந்தது. இதனால் நிதியமைச்சின் முக்கிய செயலாளர் ஒருவரின் அழுத்தத்தின் பெயரால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாகவும் முன்னாள் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிஎஸ்எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளதுடன் தனது உயிருக்கு நிதி அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

'என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நிதி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

சுங்கத் திணைக்களம், கடல் போன்றது. சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.

இது தொடர்பிலும், எனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறேன்' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, திணைக்கள அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் சோதனையிடப்படாமல் தேங்கியுள்ளதுடன் அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய பல பில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய நிலையிலிருந்த தமிழ் அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும் நிலைமை காணப்படுகின்றபோது, இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் அவர் சார்பாக குரல்கொடுக்க முன்வரவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் காவலர்கள் எனக் கூறிக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் பதவியை காக்க நீதிமன்று சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கள்ள மௌனம் காப்பதை அவதானிக்க முடிகன்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் சிங்கள சமூகத்திலிருந்து பிஎஸ்எம் சாள்ஸ் அவர்களின் சேவை மெச்சப்படுவதை சிங்கள ஆங்கில ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment