Wednesday, February 13, 2019

ஜனாதிபதி படுகொலை சூழ்ச்சியுடன், மாகந்துர மதுஷிற்கு தொடர்பு உள்ளதா?

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதுஷ் மற்றும் பாடகர் அமல் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில், தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றவியல் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது, இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் இந்த விசாரணைகளின் போது, அமல் பெரேரா மற்றும் மாகந்துர மதுஷ், தற்போது டுபாய் பொலிஸால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 21இல் பாடகர் அமல் பெரேரா, நாலக டி சில்வாவை, அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார் என்று, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதன்படி குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்த இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாகவும், குற்றவியல் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்திய பிரஜை எம்.தோமஸ் ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com