Thursday, February 14, 2019

தற்கொலையா? படுகொலையா? பெண்ணின் திடீர் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்.

மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி - வயது 36 என்கிற குடும்ப பெண் 2016 கால பகுதியில் வீட்டில் திடீர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இம்மரணம் தொடர்பாக அப்போது விசாரணை நடத்திய மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸார் இவர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து இருந்தனர். ஆனால் இது தற்கொலை அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை என்று இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வன்முறை இடம்பெற்றிருப்பதற்கு இடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அன்றைய கல்முனை நீதிவான் பயாஸ் ரஸாக் இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இம்மரணம் தொடர்பான வழக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோரை ஆதரித்து ஆஜராகி வருகின்ற சட்டத்தரணி அன்ஸார் மௌலானா மிக நீண்ட காலமாக இழுபட்டு செல்கின்ற மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்று முன்வைத்தார். இதனால் இவ்விசாரணையை மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் இருந்து நீதிமன்றம் விடுவித்து நியாயமான புலனாய்வு விசாரணை இடம்பெறுவதற்கு தகுந்த கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.

இறந்தவரின் தாய், சகோதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிவான் ஐ. என். ரிஸ்பான் கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழு இம்மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com