உப்பளத்தை மூடுமாறு கடற்றொழிலாளா்கள் மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற தனியார் உப்பளத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களைச் சேர்ந்த 9 மீனவ சங்கங்களும் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 4 மீனவ அமைப்புக்களும் இணைந்து கூட்டாக இக் கோரிக்கையை பல தரப்பினர்களிடத்திலும் விடுத்துள்ளன.
இக் கோரிக்கை தொடர்பில் உரிய பதில் கிடைக்காத நிலையில் மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை(1) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். இதன் போது இந்த விடயத்திற்கு உடனடியாக தாம் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கமாறும் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தள்ளதாவது..
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் புதிதாக தனியார் உப்பளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.; அதாவது தனங்கிளப்பு, கச்சாய், நாவற்குழி, பெரியமாவடி, கொயிலாகண்டி, மீசாலை, கெற்பெலி, மறவன்புலவு, கிலாலி, புலோப்பளை, அல்லிப்பளை கிழக்கு,கோவிந்தபுலம் கிராமங்களை அண்டிய 200 ஏக்கர் பரப்பு கொண்ட தனியார் உப்பளம் அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
இதனால் மேற்கூறப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1500 மீனவர்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இம் மீனவத் தொழிலாளிகள் இக் களப்பை நம்பியே தமது வாழ்வாதாரத்தைக் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு பாதுகாப்பு கருதி ஆணையிறவுப்பாலம் மூடப்பட்டதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து காணப்படுகின்றது. மேலும் உப்பளத்தை அமைத்து கடல் நீரை கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பிற்குள் உள்வாங்குவதால் கடல்நீர் வற்றும். ஆகையினால் இதனையே நம்பியுள்ள நாம் எமது வாழ்வாதாரத் தொழிலை எவ்வாறு மேற்கொள்வது என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் கடல் கடல் மற்றும் அதனை அண்டிய பரப்பும் அதிக உவர்த்தன்மையாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. இங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிவடைந்து விட்டது. இதனால் கடல்வாழ் மீனினங்கள் இறந்து கரையொதுங்கி வருவதுடன் உப்பளம் அமைக்கப்படுவதால் வெளியேறும் இரசாயன தாக்கத்தால் கடல்வாழ் உயிரினங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விடும் நிலை உருவாகும்.
தற்போது நாட்டில் காணப்படும் வரட்சியான காலநிலை யால் குடிநீர் வற்றி உள்ளது. அத்தோடு இவ்வாறான இராசாயனத் தாக்கம் ஏற்பட்டால் குடிநீர் மேலும் வற்றுவதுடன் உவர்த்தன்மையும் அடைந்துவிடும். குடிநீருக்கு மக்கள் திண்டாடும் நிலையும் வரும். அத்தோடு அதணை அண்டியுள்ள விவசாய நிலங்கள் அனைத்து விவசாயம் மேற்கொள்ள முடியாமல் உவர் புமியாக தரவைகளாக மாற்றமடையும் நிலை வந்து விடும். ஏற்கனவே மழைபெய்து காணப்படும் நிலையில் உப்பளம் வந்தால் இங்கு வாழும் மக்கள் எங்கு குடிபெயர்வது? மக்களுக்கு வாழும் சூழல் நிலம் அற்றுப் போகும் நிலை ஏற்படும்.
ஆகையினாலேயே இவ் உப்பளத்தை அமைக்க வேண்டாமென வலியுறுத்தி போராட்டங்களை நடாத்தி சாவகச்சேரி பிரதேச செயலருக்கும் மகஐர் ஒன்றை வழங்கியிருந்தோம். அதன் பிரதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கும் வழங்கி வைத்திருந்தோம். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலையே மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்திருக்கின்றோம். இங்கு அவர்கள் எமக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றனர். அதற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள்ளவுள்ளோம் என்றனர்.
0 comments :
Post a Comment