Saturday, February 9, 2019

''எடுத்தோம்,கவிழ்த்தோம்'' என இருந்தால், ஐக்கிய தேசிய முன்னணி வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணியும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கிய போதும், தற்காலிகமாக அந்த செயல்பாடுகள் பிற்போடப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இது குறித்த நாடாளுமன்ற விவாதம், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

நிலையியற் கட்டளைகள்,காலக்கெடு என ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், தேசிய அரசாங்க உருவாக்கத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், தேசிய அரசாங்க உருவாக்க பணிகள் பிற்போடப்பட்டமைக்கான உண்மையான காரணம், தேசிய அரசாங்கத்தின் மீது விழுந்த பலத்த எதிர்ப்பே என, பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் இந்த கருத்தை எம்மால் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

இந்த எதிர்ப்பு தேசிய அரசாங்கத்திற்கு மட்டுமே என்று ஒருபோதும் கூறி விடமுடியாது. இதற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் முன்னெடுத்த பல நடவடிக்கைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன. அண்மையில் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்த அரசாங்கத்த்தின் மீது பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அந்த பதவி நீக்கத்தை அடுத்து, நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்த எதிர்ப்புக்கு தாக்கு பிடிக்க முடியாத அரசாங்கம், இறுதியாக சார்ள்ஸின் இடமாற்றத்தை இடைநிறுத்தி, மீண்டும் அந்த பதவியை மூன்று மாதங்களுக்கு நீடித்தது.

இந்த செயல்பாடு, அரசாங்கத்தின் தற்போதைய தளம்பலை உறுதிப்படுத்துகிறது. கடந்த வருடம் ஓக்டோபரில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் பக்கம் இருந்து நம்பகமான ஆதரவு கிடைத்தது. எனினும் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாத, ஓர் ஆளுமையற்ற தன்மையை இந்த அரசாங்கம் கொண்டிருப்பதாக பல்வேறு விமர்சங்கள், முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடத்தில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐக்கிய தேசிய முன்னணியை விட, சிறுபான்மை கட்சிகளும், சில சிவில் சமூக குழுக்களும் பெரும் பங்களிப்பை செலுத்தின. இவற்றின் முக்கிய செயல்பாடுகளை சாதகமாக்கிக் கொண்ட, ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், உறுதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாது அனைத்தையும் காலம் தாழ்த்தி வருவது, மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

அரசியல் குழப்பத்தின் முற்றுப்புள்ளிக்கு பாடுபட்ட, அனைத்து தரப்பினரின் கனவுகளையும், வெற்றிகளையும், ஐக்கிய தேசிய முன்னணி, தனது சிறுமைத்தனமான செயல்பாடுகளால் ஒருபோதும் சிதைத்து விட கூடாது என, மக்கள் நலன் விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி, ''எடுத்தோம்,கவிழ்த்தோம்'' என செயல்படாமல், அனைத்து விடயங்களையும் ஆழமாகவும், தூர நோக்குடனும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது, தவிர்க்க முடியாததாகும்.

No comments:

Post a Comment