கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது - நீதிமன்றம்
மன்னார் சதொச வளாகத்தில், அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை, உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அந்த அறிக்கை தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிட முடியாது என, நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா, நீதிமன்றத்தில் வைத்து இதனை தெரிவித்ததாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களின் 5 மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை, கடந்த 16 ஆம் திகதி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள, பீட்டா ஆய்வுக் கூடத்தில் இருந்து, பெறப்பட்டிருந்தன.
இந்த அறிக்கையை இன்றைய தினம், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மன்னார் நீதிமன்றத்தில் கையளித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பான விசாரனைகள், மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றன. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் ஆகியோர், நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போதே அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாதென, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா தெரிவித்துள்ளதாக, சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment