மின்தூக்கி செயலிழந்தமை குறித்த தர மதிப்பீட்டு அறிக்கை, சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்படும்.
பாராளுமன்ற மின்தூக்கிகள் தொடர்பிலான தரமதிப்பீட்டு அறிக்கை இன்று சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மின்தூக்கியை செயற்படுத்திய நிறுவனத்தினால் இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களாக ஆய்வுகளை முன்னெடுத்திருந்ததாக, பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியினுள் 10 மின்தூக்கிகள் செயற்பாட்டில் உள்ளன. அவற்றில் இரண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 7ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி செயலிழந்தமையால், பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர், சுமார் 20 நிமிடங்கள் மின்தூக்கிக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து, மின்தூக்கி செயலிழந்தமைக்கான காரணம் குறித்து, மின்தூக்கியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை முன்வைத்தார்.
இது குறித்த அறிக்கைகையே இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நோக்கத்தை கருத்தில் கொண்டு, 6 பேர் மாத்திரம் மின்தூக்கியில் பயணிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், மின்தூக்கி செயற்பாட்டாளர் ஒருவரும், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment