Friday, February 22, 2019

ஆறாவது மாதிரியில் இருந்த மரபணு பொருட்களை பிரித்தெடுக்க தாமதம் - அகழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவின் பிளோரிடாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், அனுப்பப்பட்ட எலும்புக்கு கூடுகளில், ஆறாவது எலும்பு கூடின் மாதிரிக்கான மரபணு பொருட்களை பிரித்து எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அந்த காபன் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது. இந்த காபன் பரிசோதனை அறிக்கை, நீதிமன்றம்,சட்ட வைத்திய அதிகாரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்க் என, காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 149 ஆவது நாளாக இன்றும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில், மன்னாரில் குறித்த பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படாத நிலையில், குறித்த புதைகுழியின் அகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும், மனித புதைகுழியின் அகழ்வுப்பணியின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பாகவும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறித்த அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, காணமலாக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி, காணாமலாக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட வளாகத்திலிருந்து இதுவரையில் 323ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 314 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment