Wednesday, February 6, 2019

மக்களின் நிதியை வீண் விரயமாக்குவதற்கே, பிரதமர் ரணில் பாடுபடுகிறார் போலும் - அனுர குமார திஸாநாயக்க.

மக்களின் நிதியை வீண் விரயமாக்குவதற்கே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். எப்படியாவது அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பிரதமர் பாடுபட்டு வருகின்றார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறியதாகவும், எனினும், அந்த கட்சி,தற்போது அரசாங்கத்துடனேயே இணைந்து கொண்டிருப்பதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறினார்.

அத்துடன் தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, ஏனைய கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாது முன்னெடுக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று பிற்பகல், நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் வைத்து, இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

No comments:

Post a Comment