மறப்போம், மன்னிப்போம் - மீண்டும் வலியுறுத்திய பிரதமர்
நாட்டில் நடந்த பழையவற்றை மறந்து, மன்னித்து அனைவரும் புதிய வழியில் செல்வோமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணத்தில் வைத்து, ''அனைவரும் பழையதை மறப்போம், மன்னிப்போம்'' என கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்து பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவரது கருத்துக்கு எதிராக பல அரசியல் தலைவர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், கொழும்பில் உள்ள முக்கிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர், அனைத்தையும் மறந்து, மன்னித்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என, குறிப்பிட்டார்.
“நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், பழைய விடயங்களை மறந்து புதிய பாதையை நோக்கி செல்வதற்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து இன மக்களும் ஒரே பாதையில் செல்ல வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லையென பொய்யுரைத்தமையால் தான், அவர் தனது ஜனாதிபதி பதவியை இழக்க நேரிட்டது. மேலும், யுத்தத்தில் இராணுவத்தினர் மாத்திரம் போர்க்குற்றங்களை புரியவில்லை. விடுதலைப்புலிகளும் போர்க்குற்றம் இழைத்துள்ளனர்.
ஆகையால், இந்த விடயங்களை பற்றியே எந்நாளும் கூறிக்கொண்டு இருப்பதை கைவிட்டு, நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்காக பழையவற்றை மறந்து, புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என ரணில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment