Monday, February 25, 2019

ரன்ஜன் ராமநாயக்கவின் வாக்கு மூல அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்த குழுவின் அறிக்கை, இன்று கையளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில், அமைச்சர் இரான் விக்ரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க மற்றும் நிஷ்ஷங்க நாணயக்கார ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

இந்த குழு முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலமளித்திருந்தார். இந்த விசாரணைகளின் பிரகாரம், கொக்கெய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க வௌியிட்ட கருத்து தொடர்பில், தௌிவுப்படுத்தியுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, குறிப்பிட்டுள்ளார். அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதமரினால் மேலதிக நடவடிககைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த அறிக்கை குற்றத்தடுப்பு பிரிவினரிடமும் கையளிக்க உள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தனது 30 வருட அனுபவத்தின்படி நாடாளுமன்றத்தில் கொக்கேன் பாவனையாளர் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொக்கேன் பயன்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் பொருளாதார வசதி இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுபினர்கள் தமது வாகனத்துக்கு டீசல் அடிப்பதற்கே பணம் இல்லாது கஷ்டப்படுகின்றார்கள் எனவும் துஷார இந்துனில் மேலும் குறிப்பிட்டார்.

பொதுக் கூட்டமொன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment