வேதனமின்றி அலுகோசு வேலை செய்ய தான் தயாராக இருப்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சம்பளமின்றி பணியாற்ற தான் இப்போதே தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரபல பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய தலைவனான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த விடயம் குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார இன்று கருத்து வெளியிட்டுள்ளார். மரண தண்டனையை இரண்டே மாதங்களுள் நிறைவேற்றுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உறுதியளித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக, நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த துணிகரமான கருத்து, ஒரு முன்னேற்றகரமான நிலையை எட்டியுள்ளது. இதனால், அலுகோசு பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே, அந்த பதவியில் வேதனம் இன்றி, ஒரு தொழிலாக அல்லாது, சமூக சேவையாக இந்த பணியை செய்வதற்கு, இப்போதே தாம் தயாராக உள்ளதாக நாமல் குமார தெரிவித்தார்.
அத்துடன், பாரிய குற்றச் செயல்களுக்கு சூத்திரதாரியாக திகழும் மாகந்துரே மதுஷ் போன்றவர்களுக்கு எதிராக, மரண தண்டனையை நிறைவேற்றுவது அத்தியவசியமானது என, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment