Monday, February 18, 2019

பிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.

„ஆவா" வந்துவிட்டோம்! இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனும் ஒரு வன்முறை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அவ் வன்முறைகளுக்கு ஆவா பொறுப்பேற்றுள்ளதாக ஊடகங்கள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.

ஆவா குழு தொடர்பில் ஊடகங்கள் பல விதமான அர்த்தம் கற்பித்தல்களுடன் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தனர். இலங்கை இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆவா என ஒரு தரப்பினர் தெரிவிக்க மறுபுறத்தில்; புலிகள் வந்துவிட்டார்கள் என்றனர்.

இந்நிலையில் சிங்கள ஊடகங்களில் ஆவாவின் உறுப்பினர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டு தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளார் அருளானந்தம் அருண். அருண் என்பது தனது இயற்பெயர் எனக் குறிப்பிடும் குறித்த நபர், தான் கௌதம புத்தரின் போதனை நூலாகிய „தம்மபதம்' என்ற நூலின் தமிழாக்கத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, தனக்கோர் புத்திரன் கிடைக்கப்பெற்றதாகவும் அவருக்கு சித்தார்த் மைத்ரேயன் என புத்தரின் நாமத்தை சூடியுள்ளதுடன் தன்னையும் அருண் சித்தார்த்த மைத்ரேயன் என அழைக்கப்படுவதை விரும்புவதாகவும் கூறுகின்றார்.

அவர் அண்மையில் விஷ்வ கர்ம என்ற சமூகவலையமைப்பில் பிரபல்யமான ஊடகம் , அததெரணவில் சத்துரவுடன் , ஹிரு ரிவி யில் எல்லைகளை தாண்டி என்கின்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டு பிரபாகரன் ஒரு மோடன் என்றும் தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வொன்றை வேண்டவில்லை என்றும் அரசியல் தீர்வு என்பது அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார்.


ஹிருரிவி யில் எல்லைகளைத் தாண்டி எனும் விவாத நிகழ்சியில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் கலந்து கொண்டு பேசிய அருண் சித்தார்த் மைத்ரேயன் பேசுகையில் :



2009 இற்கு பின்னர் எல்ரிரிஈ , ஈபிடிபி , புளொட் , ஈபிஆர்எல்எப் , ரெலோ போன்ற திட்டமிட்டு செயற்படும் கிறிமினல் குழுக்கள் எதுவும் யாழ்பாணத்தில் இல்லையென்றாலும் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மானிடம் ஆயுதங்கள் உண்டெனவும் வன்செயல்களின் பின்னணியில் அவரே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


உண்மையான போராட்டம் என்பது வன்செயல்கள் அற்றதாக இருக்கவேண்டும் என்றும் அங்கு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டால் மக்கள் புரட்சியாளர்களிடமிருந்து விலத்தி செல்வார்கள் என்ற சேகுவராவின் வாக்கியங்களை நினைவு படுத்திய அருண் இலங்கையில் இடம்பெற்றது ஒரு போராட்டமே அல்ல என அர்த்தப்படுத்தினார். பிரபாகரன் மாத்திரமல்ல ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீரவும் வன்செயலையே கையாண்டதாகவும் அவர் குறிப்பிடத்தயங்கவில்லை.

சிவாஜிலிங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சமஸ்டி ஆட்சி வேண்டும் என்கின்றார். தமிழ் பிரஜையான உங்களுக்கு சமஸ்டி வேண்டுமா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, „எவரும் உங்களுக்கு சுதந்திரத்தையோ, சமத்துவத்தையோ, நீதியையோ அன்றில் எதையோ வழங்க முடியாது, அதற்கான வழியை நீங்களே தேடிக்கொள்ளவேண்டும்' என்ற மல்கம் அவர்களின் வார்த்தையை பதிலாக வழங்கி தனக்கு சமஸ்டி வேண்டியது இல்லை என்று கூறியதுடன் தனக்கு வேண்டியது எல்லாம் தனது தாய்நாட்டுக்கு தலைவணங்குவதே என்றார். அதன்போது குறுக்கிட்ட ஊடவியலாளர்கள் இந்த குறிக்கோளுடன்தானா உங்களது „சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளீர்கள் என்றபோது, ஆம் என பதிலளித்தார்.

மேலும் சமஸ்டி வேண்டுபவர்களை குருடர்களுக்கு ஒப்பிட்ட அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதாவது குருடன் ஒருவர் வெளிச்சம் என்ற ஒன்று உலகில் இல்லை என்று வாதிட்டபோது, அவரை ஜீவகர் என்ற வைத்தியரிடம் அனுப்பி புத்த பெருமான அவருக்கு பார்வையை கொடுத்தாராம். அதன் பின்னர் இப்போது விவாதிக்கலாமா என கேட்டபோது எதை விவாதிப்பது வெளிச்சம் இருக்கின்றது தானே என்றாராம் குருடர். அதாவது குருடனுக்கு வெளிச்சம் என்பது தெரியாதது போலவே சமஸ்டி கேட்பவர்களும் என்றார் அருண்.

எனவே இவர்கள் குருடர்களாயின் தமிழ் சமூகத்தில் ஜீவகர்கள் இல்லையா என்றபோது, இருக்கின்றார்கள் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் கண்ணை திறக்க விரும்புகின்றார்கள் இல்லை என்றார்.

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கோரியபோது அவ்வேண்டுதலை மறுத்துரைத்த அருண் இலங்கையில் சர்வதேச நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறுவதாயின் அமெரிக்காவினால் துருக்கியில், இராக்கில், எகிப்தில் வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்துவிட்டு இங்கு வரலாம் என்று கூறினார்.

மேலும் யாழ்பாணத்தில் மிக அவசரமான பிரச்சினை யாதெனில் யாழ் மக்களுக்கு சிங்கள மொழி விளங்காமையாகும் எனவே அதற்கு ஒரு தீர்வு வேண்டும், அதற்கு தீர்வை பெற்றுக்கொள்ளாது நிரந்தர தீர்வு வேண்டுவது முழு ஏமாற்று வித்தையாகும் என்றும் கூறினார். அத்துடன் தமிழ் மக்களின் அவசர பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கேட்கும் எமது அரசியல்வாதிகள் தங்களுக்கு கிடைக்கு சலுகைகளுக்கு முண்டியடிக்கின்றனர். அதற்கு உதாரணமாக இறுதி நேரத்தில்கூட விக்கினேஸ்வரன் தீர்வை அற்ற வாகனத்திற்காக அரசுடன் முரண்பட்ட விடயத்தை எடுத்துரைத்தார். தங்களுடைய சலுகைகளை பெற்றுக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு வருகின்ற சலுகைகளை திருப்பி அனுப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு தமிழ் மக்களிடையே குறைந்து செல்வதையும் அவர்களால் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா என சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பதலளித்தார்.

அப்பதில் தொடர்பில் கருத்துரைத்த அருண் பிரபாகரன் தமிழ் மக்களின் கருத்து சுதந்திரத்தை மறுத்து ஏகபிரதிநிதியாக செயற்பட்டதாகவும் புலிகளின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று எவ்வாறு அப்படி பேசமுடியும் எனக்கேட்டார்.

அததெரணவில் தன்னை ஆவா குழு உறுப்பினர் என்று அறிமுகம் செய்துகொண்ட அருண் சித்தார்த் மைத்திரேயன் ஹிரு ரிவியில் பேசும்போது, ஊடக செய்திகளின் பிரகாரம் ஆவா என்கின்ற அமைப்பு புலம்பெயர் புலிகளினால் நிர்வகிக்கப்படுகின்ற அமைப்பாகவே நான் கருதுகின்றேன் என்றார்.

2 comments:

  1. இவர் தன்னை ”அவா” குழுவினன் எனக் கூறியும், ஏன் இவர் அரசால் கைது செய்யப்படவில்லை? ”அவா” குழுவை உருவாக்கியது யார்? அரசா, அதன் புலனாய்வுப் பிரிவா? அல்லது ஒரு தமிழ் கட்சியா? அல்லது அரசின் ”சிநேக” நாடுகளின் புலனாய்வுப் பிரிவா? இவர் சுண்ணாகம் தெற்கான கல்லாக்கட்டுவன் என்ற இடத்தைச் சேர்ந்த முன்னைய மண்டையன் குழுக் குடும்பத்தினைச் செர்ந்தவா என்றும், அந்தக் குடும்பத்தினர் இந்தியப் படைகளுடன் இணைந்து பல புலிகளின் ஆதரவாளர்களையும், புலிகளையும் கொன்றனர் என்றும் விடயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இவர் ஹெறோயின் கைத்திருந்து பிடிபட்டார் எனவும், பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர் உண்மையில் யார் என்ற கேள்வி விடயங்கள் அறிந்தவர்கள் எழுப்புகின்றனா!

    ReplyDelete
  2. இவர் தன்னை ”அவா” குழுவினன் எனக் கூறியும், ஏன் இவர் அரசால் கைது செய்யப்படவில்லை? ”அவா” குழுவை உருவாக்கியது யார்? அரசா, அதன் புலனாய்வுப் பிரிவா? அல்லது ஒரு தமிழ் கட்சியா? அல்லது அரசின் ”சிநேக” நாடுகளின் புலனாய்வுப் பிரிவா? இவர் சுண்ணாகம் தெற்கான கல்லாக்கட்டுவன் என்ற இடத்தைச் சேர்ந்த முன்னைய மண்டையன் குழுக் குடும்பத்தினைச் செர்ந்தவா என்றும், அந்தக் குடும்பத்தினர் இந்தியப் படைகளுடன் இணைந்து பல புலிகளின் ஆதரவாளர்களையும், புலிகளையும் கொன்றனர் என்றும் விடயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இவர் ஹெறோயின் கைத்திருந்து பிடிபட்டார் எனவும், பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர் உண்மையில் யார் என்ற கேள்வி விடயங்கள் அறிந்தவர்கள் எழுப்புகின்றனா!

    ReplyDelete