புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால்.
புத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக, இன்று காலை முதல், இந்த பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்ட புத்தளம் அருவக்காடு சேராக்குளி பகுதியில், தமது உள்ளூராட்சி மன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இம்மாதம் 15ஆம் திகதி முதல் கொட்டுமாறு, பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் புத்தளம், சிலாபம் நகர சபைகளுக்கும், புத்தளம், கற்பிட்டி, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இந்த கடிதம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை கண்டித்தே இன்று புத்தளம், கரைத்தீவு, தில்லையடி, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம், மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் புத்தளம் நகரத்தில் உள்ள பாலர் பாடசாலை, அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையும் குறைவாகவே பதிவாகியுள்ளது. அதிகமான ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளனர்.
புத்தளம் - அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக மூன்று தினங்களை புத்தளத்தில், கறுப்பு தினமாக பிரகடனப்படுத்துவதாக, புத்தளம் பெளத்த மத்திய நிலையம், இந்து மகா சபை, கிறிஸ்தவ சபை, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளை, புத்தளம் பெரிய பள்ளி ஆகியன இணைந்து அறிவிந்திருந்தமை சுட்டிக்காட்டகக்காது.
0 comments :
Post a Comment