Monday, February 25, 2019
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய, கறுப்பு சட்டைக்காரர்கள்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலைய முன்றலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் நபர்களால், குழப்பம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக முன்னரே, குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் கறுப்பு நிற சட்டை அணிந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமை தாங்கவோ, போராட்டத்தில் முன்னால் இருந்து குரல் கொடுக்கவோ ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை.
அப்போது, திடீரென வந்த சிலர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கைகளில் ஏந்தியிருந்த பதாகைகளை, மறைத்தவாறும் உறவுகளின் முன்பாக தாம் நின்று கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்டுள்ளனர்.
குறித்த பேரணிக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டியவாறு பேரணியை வழிநடத்திக் கொண்டிருந்தவர்களிடம், நீங்கள் எங்களை வழிநடத்த வேண்டாம் எனக் கூறி முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அறிவிப்பை மேற்கொண்ட இளைஞன் மீது, தாக்குதலை மேற்கொண்டு ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை அறுத்துள்ளனர்.
இதனிடையே, இப்போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்த கறுப்பு சட்டை அணிந்தவர்கள் குறித்து, செய்தியறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ஊடகவியலாளர்களுடன் அவர்கள் முரண்பட்டுள்ளனர்.
இதன்போது, ''போராட்டம் பின்னால் நடக்கும் போது, ஏன் எங்களை படம் எடுக்கிறீர்கள்? போராட்டத்தில் ஈடுபடுபவர்களை படம் எடுங்கள்'' எனக் கூறி, அவர்கள் ஊடகவியலாளர்களை மிரட்டினார்கள். அத்துடன் தொடர்ந்து ஊடகவியலார்களின் பணிக்கும் இடையூறுகளை விளைவித்து வந்தனர்.
மேலும், குழப்பத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை, தமது கைத் தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்து “எவரும் கிளிநொச்சியை தாண்டிப் போக மாட்டீர்கள்” என அச்சுறுத்தி, ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளையும் தட்டிவிட்டு, அவர்களைத் தாக்கவும் முற்பட்டார்கள்.
குறித்த கறுப்பு சட்டையுடன் குழப்பத்தில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் எனவும், தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை குழப்பும் விதமாக பல தடவைகள் இவ்வாறு நடந்துள்ளார்கள் எனவும், சுதந்திர தினத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் இவ்வாறான குழப்பங்களை அவர்கள் செய்தனர் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment