Friday, February 15, 2019

லயோலா கல்லூரியில் உலகத் திரைப்பட விழா! முன் பதிவு அவசியம்!

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தான் பிறந்த மண்ணில் வாழும் உரிமை இருக்கிறது. ஆனாலும் உள்நாட்டுக் கலவரம், வேலை இல்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, காலநிலை மாற்றம், வளங்களைக் கொள்ளை அடிப்பதற்காக தொடுக்கப்படும் போர் உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்பட்டு, தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றவர்கள் பல கோடி பேராக இன்று அதிகரித்துள்ளனர்.

UNHCR (United Nations High Commission for Refugees) என்கிற அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 - ஆம் ஆண்டு வரை சொந்த நாட்டை விட்டு பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஏழு கோடி பேர் என்றும், இதில் இரண்டரைக் கோடி பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்றும் கூறுகிறது. இவர்களில் 51% குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியே பயணம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இவற்றுள் பிற நாடுகளுக்கு வரும் அகதிகளை மற்ற நாடுகள் அணுகும் விதத்தில் பல கொடுமையான துயரங்களை அந்த மக்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த நாட்டையும், உடைமைகளையும் விட்டு வெளியேறும் மக்களை நேசக்கரம் கொண்டு ஏற்றுக் கொள்வது மிகச் சில நாடுகளே. அதிலும் அகதிகளுக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது என்பது மிக சொற்ப இடங்களில் மட்டுமே நடக்கிறது.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்களிடம் வலி சுமந்த பல கதைகள் உள்ளன. ஒரு அகதியின் துயரை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி, இன்று மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு அடைக்கலம் தேடும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ரோஹிங்கிய முஸ்லிம்கள் படும் இன்னல்கள் என அடைக்கலம் தேடும் மக்களின் போராட்டத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.



லயோலா கல்லூரியில் லைவ் (LIVE-Loyola Institute of Vocational Education) துறையால் திரைப்படம் மற்றும் ஊடகம் பயிலும் மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக உலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு தலைப்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அந்த விழா பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் இந்த வருடத்திற்கான திரைப்பட விழாவில் 'புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் வாழ்க்கை' என்ற கருவை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நிகழ இருக்கும் லைவ் திரைப்பட விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 12 முழு நீள திரைப்படங்களும், ஏழு குறும்படங்களும் திரையிடப் பட இருக்கின்றன. இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான கௌதம் கோஸ் (Goutam Ghose) இயக்கிய ‘ஷங்காச்சில்’ (Shankhachil) என்கிற படம் திரையிடப்படுகிறது. அதோடு அவர் இவ்விழாவில் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொள்கிறார். அவரோடு இலங்கையிலிருந்து இயக்குனர் சுஜீத், கேரளாவிலிருந்து இயக்குனர் மகேஷ் நாராயணன் மற்றும் ஜெர்மனி நடிகர் வசிலிஸ் கௌலகானியும் (Vassilis Koulakani)மற்றும் பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

திரையிடப்படும் சில படங்களின் குறிப்புகள் பின் வருமாறு:



‘ஷங்காச்சில்’ (Shankhachil)

கௌதம் கோஸ் இயக்கிய இந்தப் படத்தின் கதை இந்தியா - பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் நடைபெறுகிறது. தங்கள் இளம் மகளின் சிகிச்சைக்காக ஒரு இஸ்லாமியக் குடும்பம், இந்துப் பெயர்களை தங்கள் அடையாளமாகக் கொண்டு கொல்கத்தாவிற்கு வருகிறது. அதனால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களை நெஞ்சை உருக்கும் வகையில் திரையில் எடுத்துக் காட்டியுள்ளார் கௌதம் கோஸ்.


டேக் ஆஃப் Take off : (Malayalam)

ஈராக் நாட்டில் 2014-ம் ஆண்டு ISIS தீவிரவாதிகளால் ஏற்பட்ட கலவரத்தின் போது, அந்த நாட்டின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அவர்கள் எப்படி மீட்கப்பட்டனர் என்பதை மிகவும் புல்லரிக்கும் விதமாக திரைப்படம் உருவாகியிருக்கிறார் மகேஷ் நாராயணன்.



டெஸரிட்டோ - Desierto (பிரான்ஸ்)

மெக்ஸிக்கோவிலிருந்து பல இளைஞர்கள் ஒரு குழுவாக ஒரு ஏஜெண்டின் துணையுடன் அமெரிக்காவிற்குள் ஊடுருவ முற்படும்போது ஒரு அமெரிக்கன் தன்னை நாட்டு பாதுகாவலனாக நினைத்துக் கொண்டு அந்த இளைஞர்களை குறி தவறாமல் சுட்டுத் தள்ளுகிறான்.அவனுடைய முரட்டு நாயும் இந்த கோர தாக்குதலில் அவனுக்கு துணை நிற்கிறது. மயிர்க்கூச்செரியும்படியான காட்சி அமைப்புகளை கொண்டுள்ள இந்தப் படம் பிரபல இயக்குநர் ஜோனாஸ் க்யுரான் (Jonas Cuaron) அவர்களால் இயக்கப்பட்டு2015-ம் ஆண்டு வெளியானது.



தி லாஸ்ட் ஹால்ட் (The Last Halt)

இலங்கையிலிருந்து ஒரு இளம்பெண் தன் மேற்படிப்பை தொடரும் முடிவுடன் இங்கிலாந்து செல்கிறாள். தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கிக் கொண்டு மேற்படிப்பிற்க்கான முயற்சிகளை அவள் எடுக்கும்போது, அந்த உறவினர்கள் ஏதோ சிறு காரணத்திற்காக அவளைத் துரத்தி விட தன்னந் தனியே தவிக்கிறாள்.ஆயினும் இலங்கையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் தன் பெற்றோர்களுக்கு தன் உண்மை நிலையை சொல்லாமல், தான் நன்றாய் இருப்பதாய் கூறுகிறாள். ஏதாவது வேலை ஒன்று கிடைத்தால் அதன் மூலம் அந்த நாட்டில் முறைப்படி தங்கிப் படிப்பதற்கு முயற்சி செய்யலாம் என்று பலவாறு முயற்சி எடுக்கிறாள். அவளுடைய எண்ணம் ஈடேறுமா என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிக்கிறது இந்தப் படம்.

இவற்றைத் தவிர இவ்விழாவில் இன்னும் பல சர்வேதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல திரைப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. திரைத்துறையைச் சேர்ந்த மாணவ / மாணவிகள் இந்த விழாவின் மூலம் சர்வதேச திரைப்படங்களின் பார்வை, அதன் போக்கு மற்றும் தொழில்நுட்ப உக்திகளை அறிந்து கொள்ள முடியும். அது அவர்களின் துறைசார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது நிதர்சனம்.

இத்திரைப்பட விழா ஊடகம் மற்றும் சினிமாத் துறைப் படிப்புகளைச் சார்ந்த மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தல் அவசியம். அதன் விபரங்கள் பின் வருமாறு:

கைப்பேசி எண்கள்: 9789016557, 9500092712
E-mail: live@loyolacollege.edu
Web: http://www.loyolacollege.edu/live/FilmFestival.php

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com