Wednesday, February 27, 2019

அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கவேண்டும் - யாழில் தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையே என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் நினைக்கின்றார்கள் தேர்தலில் அரசியல்வாதிகளை தெரிவு செய்த பின்னர், அந்த அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று. மக்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று எண்ணுகிறார்கள். மக்கள் இவ்வாறு நினைப்பது தவறானது.

மக்களால் தெரிவாகும் அரசியல்வாதிகள், மக்களின் தேவைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளாவிட்டால் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்கும் நிலை வந்தால்தான் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.

இதேவேளை, இந்தியாவை பொறுத்தவரை தேர்தல் வாக்குச் சீட்டில் உள்ளவர்கள் எவரையும் விரும்பவில்லை என்று பதிவிடுவதற்கு ஒரு தெரிவு உள்ளது. இந்த முறை எமக்கு தேவையா? என்று நாங்கள் இங்கு கூறவில்லை.

ஆனால், மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் பெறுமதியை தெரிந்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் வாக்களிப்பு வீதம் குறைவடையாது என்பதை எதிர்பார்க்கின்றோம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


No comments:

Post a Comment