மனித எலும்பு கூடுகளின் ஆய்வு அறிக்கை, தயார் நிலையில் உள்ளது - சமிந்த ராஜபக்ச.
மன்னார் சதொச வளாகத்தில் வைத்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அதன் ஆய்வு அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு அறிக்கை, நாளைய தினம், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த ஆய்வு அறிக்கை, கடந்த 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்றும், சமிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள், 144 ஆவது நாளாக இன்றும் இடம்பெற்றன. அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில், இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பணிகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
மன்னார் மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதாகும்.
இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது சுமார் 40ற்கும் மேற்பட்ட பொலிஸார், பயிற்சி பெற்றுக் கொள்ளும் அடிப்படையில், மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு வருகை தந்ததாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெகு விரைவில் மன்னார் மனித எச்சங்கள் தொடர்பில் எழுந்துள்ள மர்மங்கள், நிவர்திக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment