Saturday, February 2, 2019

நாளொன்றுக்கு இரண்டு பில்லியன் ரூபாய்களை நாட்டுக்கு சேதமாக்கி நிற்கின்றது பிஎஸ்எம் சாள்ஸ் ன் இடமாற்றம்.

சுங்கத்திணைக்களத்தின் இயக்குநர் நாயகமாக கடமையாற்றிய திருமதி சாள்ஸ் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக சுங்கத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டணி தனது பலத்தை எதிர்ப்பை காட்டும் பொருட்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பினால் நாட்டுக்கு நாளொன்று 2 பில்லியன் ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவி மாற்றம் செய்யப்பட்டமைக்கான நியாயமான காரணத்தை தமக்கு தெரியப்படுத்தும் வரை கடமைக்கு திரும்பப்போவதில்லை என அறிவித்துள்ளதுடன் திருமதி சாள்ஸ் அவர்கள் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே அவரை இடமாற்றம் செய்துள்ளதாக குற்றஞ்சுமத்துகின்றனர்.

அத்துடன் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்றுவந்த பாரிய மோசடிகளை தடுக்க திருமதி சாள்ஸ் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாகவும் இவ்விடமாற்றமானது மீண்டும் மோசடிகளுக்கு இடம் கொடுப்பதாக அமையும் என்றும் அவர்கள் சாடுகின்றனர்.

சுங்கத்திணைக்களத்தில் திருமதி சாள்ஸ் அவர்கள் மேற்கொண்ட மாற்றத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைநெட் அறிந்து கொண்டதாவது, மோசடிகளை செய்தார்கள் என சந்தேகிக்கப்படுகின்ற 7 சுங்க அத்தியட்சகர்களை சுங்கவரி சட்டத்தின் 137ம் பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய விடுமுறையில் அனுப்பியிருந்தார். இந்த நிகழ்வானது சுங்க திணைக்களத்தின் வரலாற்றில் இடம்பெறாத ஒர் அதிரடி நடவடிக்கையாகும் எனவும் பதிவாகியுள்ளது.

மேலும் பிஎம்டபிள்யூ வாகன இறக்குமதியில் 16 பில்லியன் ரூபாய்கள் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படும் வகையான மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடிக்கு அக்காலத்தில் சுங்க திணைக்களத்தின் இயக்குனர் நாயகமாக இருந்த சூரானந்த பெரேரா என்பவர் ஒத்தாசை புரிந்துள்ளமை நிரூபிக்கப்பட்டதுடன் அவருக்கு 1 லட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்த உத்திரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்க திணைக்களத்தின் இயக்குனர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி சாள்ஸ் குறித்த விசாரணையின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மீண்டும் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சிபார்சு செய்துள்ளார்.

அத்துடன் ஹர்ச என்ற நபருக்கு சொந்தமான Vehicle Lanka என்ற பெயர் கொண்ட கம்பனி ஒன்றினால் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. அவர்கள் வாகனங்களின் செசி பகுதியை இரு பாகங்களாக வெட்டி நாட்டினுள் இறக்குமதி செய்து அவற்றை ஒட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் நாட்டிற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது என்பதை உணர்ந்த திருமதி சாள்ஸ் மேற்படி செயற்பாட்டினையும் முடக்கியுள்ளார்.

மேலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் 5 வீத வரியே விக்கப்படமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக இலங்கை விவசாயிகளுக்கு பாரிய இலாபம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை தவறாக பயன்படுத்தும் வர்த்தக மாபியாக்கள் இந்தோனேசியா மற்றும் ஈரான் பொருட்களை இலங்கைக்கு தற்காலிகமாக இறக்கி இங்கிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்கின்றனர். இதன் ஊடாக இலங்கை விவசாயிகளுக்கு பாரிய தீங்கு இழைக்கப்படுவதுடன் நாட்டுக்கு கிடைக்கப்பெறவேண்டிய இலாபம் கறுப்பாக மாற்றப்படுகின்றது. இந்த மோசடிக்கும் திருமதி சாள்ஸினால் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையிலே அனைத்து மாபியாக்களும் இணைந்து அவரை இடமாற்ற அழுத்தம் கொடுத்துள்ளனர்.

மாவட்டம் ஒன்றின் செயலாளராகவிருந்த அவர் தற்போது நிதியமைச்சினுள் முடக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இச்செயற்பாட்டுக்கு எதிராக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தற்போது அத்தியாவசிய கடமைகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் சாதகமான தீர்ப்பு கிடைக்காத பட்சத்தில் அவர்கள் முழு பகிஷ்கரிப்பில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின் அத்தியாவசியமான உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுவரமுடியாத நிலைமை ஏற்படின் அதன் விளைவுகள் பாரதூரமாகலாம்.

No comments:

Post a Comment