Friday, February 8, 2019

புத்திக்க பத்திரண கூறியது பொய் - அமைச்சர் ராஜித்த

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த வித உண்மை இல்லையென, சுகாதார மற்றும் போசனை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவினால் , பால்மா தொடர்பில், தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்றும் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில், பன்றி எண்ணெய் கலக்கப்படவில்லை எனவும் சுகாதார மற்றும் போசனை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விளக்கம் அளித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் உள்ளதாக, நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் பெளசர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் கலப்படம் இருப்பதாக முறைப்பாடுகள் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனும், பிரதியமைச்சர் புத்திக பத்திரனவும் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால், இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை தேசிய ரீதியில் உள்ள ஆய்வு கூடங்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை
காரணமாக ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வு கூடங்களை நாடவேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளோம். சர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவரில் கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், அது மனித பாவனைக்கு உதவாத பால்மா வகை என்றால் உடனடியாக தடைசெய்யப்படும்.

சர்வதேச ஆய்வுகூடங்கள் மேற்கொள்ளும் ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபையின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் பெளசர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment