Friday, February 22, 2019

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை, ஒத்திவைப்பு - நீதிமன்றம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு நீதியரசர் சம்பத் அபேகோன் தலைமையில் சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவித்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்தமைக்கு எதிராக, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ததாக, தலைமை நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்தார்.

எனினும் அந்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்ததாக விஷேட நீதாய மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், திறந்த மன்றில் அறிவித்தார். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment