சட்டத்தை எவரும் தவறாக கையில் எடுக்க முடியாது - நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல்
எந்த நாட்டிலும் சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. ஏதேனும் சீர்கேடுகள் இடம்பெற்றால், அவற்றைத் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என, யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரமற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பரிசோதகர் என, போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றி வந்த இளைஞர் ஒருவரை, கடுமையாக எச்சரித்து விடுவித்த போதே, நீதவான் இதனை கூறினார்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பாக பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியின் பழைய மாணவன் ஒருவர், போலி ஆவணங்களைத் தயாரித்து சுகாதாரப் பரிசோதகர் சேவையைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால்கடந்த தினம் கைது செய்யப்பட்டார்.
அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை, தனது பெயரில் தயாரித்து வைத்து பல வியாபார நிலையங்களுக்குச் சென்று, காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார்.
அவரின் இந்த நடவடிக்கை தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர் ஒருவரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவம் குறித்த விசாரணைக்கு பொலிஸார் குறித்த இளைஞரை அழைத்த போதும், அவர் காவல்துறையிடம் செல்லவில்லை.
இந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய பொலிஸார், இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இதனை அடுத்து அந்த இளைஞர், ஒருநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையின் போது , 'சந்தேகநபர் சட்டத்துக்கு புறம்பாகச் செயற்படும் நோக்குடன் நடந்து கொள்ளவில்லை. அவர் சமூக அக்கறை கொண்டே இவ்வாறு செயற்பட்டார். அதனால் அவரை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுக்கவேண்டும்' என்று, இளைஞர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.
இதேவேளை, இளைஞனுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையைக் கோரி எந்தவித முறைப்பாட்டையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்த வர்த்தகர், அவரை எச்சரிக்க வேண்டும் என்ற நோக்குடனேயே இவ்வாறு நடந்து கொண்டதாக மன்றுக்கு கூறினார்.
இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இளைஞனை எச்சரிக்கை விடுவித்ததுடன், சட்டத்தை யாரும் தவறாக பைடன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்பட்ட மாட்டாது என கூறினார்.
0 comments :
Post a Comment