Tuesday, February 12, 2019

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கை துரிதமாக்க தீர்மானம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை துரிதமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படும் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வௌியிட்டு, இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி மீதான குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கு முறைப்பாட்டாளர் சார்பில் சட்டமா அதிபருக்கு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கை நிறைவுசெய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய இந்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment