அமல், நதீமால் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி
அண்மையில் பாதாள உலக குழுவினருடன் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு துபாயின் குற்றவியல் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக, சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி தெரிவித்துள்ளார்.
தற்போது டுபாயிலுள்ள சிறைச்சாலையில் இவர்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சந்தேக நபர்களின் மருத்துவ அறிக்கையை அடிப்படையாக கொண்டு, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி ஷாப்திக வெல்லபிலி தெரிவித்துள்ளார். தற்போது இவர்களது மருத்துவ அறிக்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் நெருங்கிய தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின், திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக, 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளன.
மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், பாதாள குழு உறுப்பினர்கள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment