ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான விராஜ் மதுஷங்க எனும் உப பொலிஸ் அதிகாரியே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சில்வா கைது செய்யப்பட்டதுடன், அவர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக்க ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளனர்.
பொலிஸ் சீருடையில் வருகை தந்தவர்கள் துப்பாக்கி முனையில் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சதிஸ் கமகேவினால் கடந்த 5 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவ்வாறான கைது எதுவும் இடம்பெறவில்லையென கடந்த 14 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள விசேட பிரிவினரால் குறித்த வர்த்தகர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாக கடந்த வாரத்தில் அவர்களின் வீட்டிற்குக் கிடைத்த அநாமதேய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்போது, பொலிஸாரின் தாக்குதலில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றைய வர்த்தகர் அதனைக் கண்டதால் அவரையும் கொலை செய்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment