Saturday, February 2, 2019

புலிகளின் பெயரில் துண்டுப்பிரசுரம் - ஜனநாயக போராளிகள் கட்சி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் கண்டெடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரம், முன்னாள் போராளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த வாரம் வைரவ புளியங்குளப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தினாலேயே, இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகவிலாளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, அவர் இதனை தெரிவித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி சர்வதேச மட்டத்திலும், இலங்கைக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்ற இந்த அநாவசிய செயற்பாடுகள் மிக நீண்டகால அடிப்படையிலேயே தொடர்ந்தும் இலங்கையை ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளுமென நாம் நினைக்கின்றோம்.

எனவே இலங்கையில் புலனாய்வுத் துறை, சட்டத்துறை, நீதித்துறை இருக்கின்ற நிலையிலே இந்த வதந்திகளுக்கு காரணமாக இருப்பவர்களை அடையாளம் காண்பது, மிக இலகுவான விடயமாகவே உள்ளது.

இங்கு நடைபெறுகின்ற ஒவ்வாரு சம்பவங்களையும் மிக ஆழமாக ஆராய்ந்து இலங்கையை மதிப்பு மிகுந்த நாடாக, ஒரு சுதந்திர நாடாக சகல மக்களும் வாழக் கூடிய ஒரு நாடாகக் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை என்பதை, தாம் வலியுறுத்துவதாக, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment