அடுத்த தேர்தலில் களமிறங்குவது குறித்து, மைத்திரி - மஹிந்த கூட்டணி முக்கிய பேச்சு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முக்கிய பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் வைத்து, கடந்த தினம் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன. சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, ஏ.எச்.எம்.அதாவுல்லா, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வைத்து, பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. டலஸ் அழகப்பெரும தலைமையிலான இந்தக் குழுவில், தயாசிறி ஜெயசேகர, திலங்க சுமதிபால, அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் அமைப்பாளராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணிகளை இந்தக் குழு முன்னெடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தும் பேச்சுக்களை அடுத்து, எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
பின்னர் இது குறித்த தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment