திருகோணமலையில் மீண்டும் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை விரைவில்...
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் மணல் அகழ்விற்கான அனுமதி பத்திரங்களை விநோயோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல், மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து, 28 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருகோணமலையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற மணல் அகழ்வைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள், கடந்த சில தினங்களாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றின் 2 குழுக்களினால் 500 பகுதிகளில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள இறுதிக் கூட்டத்தில், அனுமதி வழங்கக்கூடிய பத்திரங்களுக்கு மாத்திரம் மீண்டும் அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக 1,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment