பிரதமர் ரணில், இந்த நாட்டையே காட்டிக்கொடுத்து விட்டார் - மஹிந்த ராஜபக்ச
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி, சர்வதேச சமூகத்திடம், எமது நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின், அதற்கு நாம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். எனினும் இவற்றை போர்க்குற்றங்களில் உள்ளடக்க முடியாது.
வடக்கில் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறியமை, எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுத்தமைக்கு நிகரானதாகும்.
கடந்த நான்கு ஆண்டுகள் இருந்த நல்லாட்சியின் தலைமைத்துவத்தை வைத்து கொண்டு, எந்தவித ஊழல் மோசடிகளையும் தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சியுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போராடி வருகின்றார்.
இப்போது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது பக்கம் வந்து விட்டார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறினார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment