Friday, February 15, 2019

நாட்டை பிளவுபடுத்தி, முஸ்லிம்களின் உரிமையை பறிக்க முனையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டம்.

சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காகவும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் முஸ்லிம்களின் உரிமையை பறித்து உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் ரிஸான் தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

புதிய அரசியல் யாப்பின் முன் நகல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒருமித்த நாடு தத்துவம், வடகிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது, ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் அரசியல் சாசன நீதி மன்றம் போன்ற பல விவகாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றை ஆட்சியாகவே காணப்படுகிறது. ஒற்றை ஆட்சியென்பதை ஒருமித்த நாடு என்று மாற்றி நாட்டுக்குள் பல பிளவுகளை கொண்டுவர ரனில் தலைமையிலான அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகிறது.

ஒற்றை ஆட்சியென்பது பிளவு படாத நாட்டை குறிக்கும் வார்த்தையாகும். ஒருமித்த நாடு என்பது பிளவுபட்ட, ஆட்சியமைப்பை குறிக்கும் சொல்லாடல் ஆகும். நாட்டை பிளவுபடுத்தி இன்னுமொரு உள்நாட்டுப் போரை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் முயற்சியாகவே இந்த ஒருமித்த நாடு தத்துவம் பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே புதிய அரசியல் யாப்பில் ஏளவே இருப்பதைப் பொன்ற ஒற்றை ஆட்சி என்ற வார்தையே மீண்டும் இடம் பெற வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கபடுவதை ஒரு போதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தற்போது கிழக்கு மாகாணத்தில் சுமார் 39 சதவீத முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட்டால் முஸ்லிம்கள் 17 சதவீதமாக குறைந்து விடுவார்கள். இது முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் புதிய அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாண அரசுகளுக்கு வழங்கப்படவுள்ளது. மாகாணங்களுக்கு குறித்த அதிகாரங்கள் வழங்கப்படுவதென்பது ஒவ்வொரு மாகாணத்திலும் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமைந்து விடும். இது தொடர்பில் நாடு முழுவதும் விரிவாக தெளிவுரைகளை நாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் வழங்கி வருகிறோம்.

ஜனாதிபதி முறை மாற்றத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் பல அநியாயங்கள் இழைக்கப்படுகிறது.

அநியாயங்கள் நடைபெறும் போது, அநியாயத்திற்கு துணை நிற்கும் அரசாங்களுக்கு பாடம் புகட்டுவதற்கு உள்ள ஒரே தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் மாத்திரமே அமைந்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நியாயம் கேட்க்கும் இந்த முறையிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகவே தான் ஜனாதிபதி முறைமையை மாற்றக் கூடாது என்று முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகிறோம்.

புதிய அரசியல் யாப்பில் அரசியல் சாசன நீதி மன்றம் என்றொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அரசியல் சாசன நீதி மன்ற நீதிபதிகள் தவறிழைத்தால் அவர்களை சர்வதேச நீதி மன்றம் விசாரணைக்கு உட்படுத்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் பெரும் ஆபத்தான ஒரு முறைமையாகும்.

சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை நீதித்துறையில் நேரடியாக நுழைவிக்கும் இந்த செயல்பாட்டை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போல் பல பிரச்சினைகள் புதிய அரசியல் யாப்பில் காணப்படுகிறது. ஆகவே தான் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்து வருகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றிய தெளிவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய அரசியல் யாப்பை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

புதிய அரசியல் யாப்புக்கு எதிராக நாடு முழுவதும் தெளிவூட்டும் பிரச்சாரங்களை தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வருவதுடன், இதற்கு எதிராக வீதியிலிறங்கி போராடவும் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிலோத் தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்றைய ஊடக சந்திப்பில் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியிலும், அமைப்பின் தலைவர் ரிஸான் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் தமிழ் மொழியிலும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com