இந்த அரசாங்கம், அடுத்து என்ன செய்ய போகிறது?
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கருதப்படும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதே, நாட்டு மக்கள் முதல் சர்வதேசம் கொண்டுள்ள எதிரார்ப்பாகும். எனவே இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கம் அடுத்தாக என்ன செய்யப் போகிறது? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை குறித்த பேச்சுக்கள் தீவிரமடைந்திருந்தன. எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போது இலங்கையில் இடம்பெற்ற மந்த உரிமை மீறல்கள், சட்ட விதிமுறை மீறல்கள் குறித்த கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் நீதியை எதிர்பார்த்துள்ள மக்கள் மாத்திரமன்றி, நீதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் அதிக கவனம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் சந்த்தித்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், அவர்களுக்கான நீதி கோரியும், பல கூட்டத்தொடர்களில் சர்வதேசம் தமது கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும் மக்களுக்கான நீதி இன்று வரை கிடைக்காமல், ஏமாற்றம் மட்டும் நீடித்துக் கொண்டு செல்கின்றது.
இறுதி யுத்தத்தின் போது, தாம் பட்ட துன்பங்களும், அதன் பின்னர் ஏற்பட்ட காயங்களும் ஆற வேண்டும் என, மீண்டும் தம்மை வருத்தி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் தனது உறவுகளை இழந்து தத்தளித்து கொண்டிருக்கும் மக்களும், மறு பக்கம், தமது உறவுகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் அவர்களை தேடி தருமாறு தவிக்கும் மக்களும், நாளுக்கு நாள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகத்திடையே ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கிடையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கை குறித்த மூன்று பிரேரணைகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து நிறைவேற்றப்பட்டன. இதில் மூன்றாவது பிரேணை பலராலும் வரவேற்கப்பட்டது. அந்த பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதற்கான விசாரணை அறிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், கலப்பு நீதிமன்றம் ஊடாக யுத்த குற்றச்சாட்டு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த காலத்தில் இருந் நல்லாட்சி அரசாங்கம், இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை விரும்பவில்லை. அடுத்து இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில், கலப்பு நீதிமன்றம் குறித்த விடயம் உள்ளடக்கப்படவில்லை.
மாறாக வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றுதலுடன் கூடிய நீதிமன்ற பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்த பிரேரணைக்கு 2015 ல் இலங்கை அனுசரணையும் வழங்கியிருந்தது. அதன் மேற்பார்வை காலம் கடந்த 2017 ஆம் ஆண்டு, நிறைவு பெற்றது.
அதன் பின்னர் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு அந்த பிரேரணை நீடிக்கப்பட்ட்டது. அதன்படி நீடிக்கப்பட்ட பிரேரணை இந்தமுறை இடம்பெறவுள்ள 40 ஆவது கூட்டத்தொடரில் மீண்டும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 4 வருடங்களில், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் முன்னெடுப்புக்களுக்கு என்ன நடந்தது? என, மனித உரிமை ஆணையாளர் தனது மதிப்பீட்டு அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை அடுத்து, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கருத்தாடல்கள் இடம்பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட்டு, அதன் செயல்பாடுகள் இன்று வரை இடம்பெற்றாலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அதில் திருப்தி கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
இதுதவிர இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம்,உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என அரசாங்கத்தால், பல நகர்வுகள் இடம்பெற்றாலும், மக்கள் அதில் முழுமையான நம்பிக்கை இன்றி, மன விரக்தியில் உள்ளனர் என்பதை, எம்மால் பார்க்க முடிகின்றது.
இந்த நிலை, இன்னும் சில காலம் நீண்டால், அடுத்து வரும் தலைமுறைகளும் அதிகாரம் பொருந்திய அரசை ஏற்காமல் கொந்தளிப்புடன் இருக்கும் என, பல அரசியல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். இத்தனை கேள்விகளையும், எதிர்பார்ப்புக்களையும், கொண்டு, இறுதியில் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டால், 30 வருடங்களுக்கு முன் தோன்றிய யுத்தம், இப்போது உருவெடுத்து விடுமோ என்ற அச்சம் எம்மவர் மத்தியில் தோன்றியுள்ளது.
இந்த அனைத்து விடயங்களுக்கும் நியாயமானதும், திருப்தியானதுமான தீர்வை வழங்க, இந்த அரசாங்கம் அடுத்து என்ன செய்ய போகிறது? என்பதே அனைவர் மனதிலும் உள்ள முதன்மை கேள்வியாகும்.
0 comments :
Post a Comment