மாவனல்லை விவகாரம் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சட்டத்தரணிகள்
புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவனல்லையிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் அண்மையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றம் இழைத்தமை தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 17 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, குறித்த குற்றத்தை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டிய -உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் கைதாகியுள்ளனர். அதில் பெண் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று கேகாலை சிறைச்சாலையிலுள்ள 11 சந்தேகநபர்கள் கடுமையான பாதுகாப்புடன் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலும் வனாத்தவில்லு பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வர் மீதும் மாவனல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment