சுங்க திணைக்கள பணிப்பாளரின் பதவி நீக்கத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - ரிஷாட் பதியுதீன்.
முன்னாள் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரான திருமதி சார்ள்ஸ், அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, சுங்க திணைக்கள அதிகாரிகள் இணைந்து, இன்று ஏழாவது நாளாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், துறைமுகங்களின் சில முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த போராட்டத்திற்கு மதுவரி திணைக்களம், பதிவாளர் திணைக்களம் என்பனவும், தமது ஆதரவை வழங்கியுள்ளன,
இந்த நிலையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரான சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கருத்து வெளியிட்ட போதே, இதனை கூறினார்.
திருமதி சார்ள்ஸை பதவி நீக்கிய விடயத்தில், தன்னுடைய தலையீடு எதுவும் இல்லை என்பதுடன், அவரை பதவி நீக்கியமையை, தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தவறானவர் அல்ல. அவர் எப்போதும், சிறந்த முடிவுகளையே எடுப்பார். சில வேளைகளில் சுங்க திணைக்கள பணிப்பாளர் குறித்து, யாராவது குற்றச்சாட்டு கடிதங்களை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அனுப்பியிருக்கலாம்.
எனினும் அமைச்சர் மங்கள சமரவீர, இனவாதியாக செயற்படுபவர் அல்ல என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment