Thursday, February 7, 2019

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி குறித்த மனு ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.

குறித்த மனு நீதிபதிகளான புவனேக அளுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியயோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக எழுத்துமூல கோரிக்கையை விடுப்பதற்கு, கால அவகாசம் வழங்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் தமது சேவையாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்னும் பூர்த்தியாகவில்லை என்பதால் அதற்கு காலம் வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக இருந்தால், உச்ச நீதிமன்றில் உள்ள இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கு தமது சேவையாளர்கள் தயார் என்று நீதிமன்றில் அறிவித்தார்.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment