Thursday, February 7, 2019

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்.

ஏ.ரீ.எம் அட்டைகளை கொண்டு, பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் இலங்கை மக்கள், மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என, இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி, விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக மோசடியான முறையில், ஏ.ரீ.எம் அட்டைகளை கொண்டு பணபரிமாற்ற நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாக, தமது நிறுவனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்வதுடன், வாடிக்கையாளரின் நிதிக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த, மத்திய வங்கியும், ஏனைய அதிகாரம் வழங்கப்பட்ட முதன்மை வங்கிகளும், இதுவரை பயன்படுத்திய பாதுகாப்பு அளவிடைகளுக்கு மேலதிகமாக, பல அளவிடைகளை ஆரம்பித்துள்ளன.

தானியக்கக்கூற்று பொறிகள் பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில், ஈ.எம்.வி செயல்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ள்ளது.

ஈ.எம்.வி செயல்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளின் முன்பக்கத்தில் தெளிவாக புலப்படக்கூடிய இலத்திரனியல் சிப் அட்டை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் தானியக்கக்கூற்று பொறிகள் பரிமாற்றங்களை, பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

ஏ.ரீ.எம் அட்டைகள், அடையாளம் காணப்படாத, அதிகாரமளிக்கப்படாத மற்றும் காணாமல் போன நிலையில் இருந்தால், விரைந்து உரிய வங்கியின் அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் CCTV கேமராக்களில் தென்படாத வகையில் யாராவது, ஏ.ரீ.எம் நிலையத்தில் நடமாடினால், உடனடியாக வங்கிக்கோ அல்லது காவல்துறைக்கோ அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பில், சீன பிரஜைகளும், ருமேனிய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏ.ரீ.எம் இயந்திரத்திற்கு அருகாமையில், இயந்திரம் ஒன்றை பொருத்தி, ஏ.ரீ.எம் அட்டைகளை உட்செலுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி, பின்னர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை, விசாரணைகளின் போது, கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து, 200 போலி ஏ.ரீ.எம் அட்டைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு, காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியாசகர் ருவான் குணசேகர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment