Wednesday, February 20, 2019

பால்மாவில் மனிதனுக்கு ஒவ்வாத பதார்த்தங்கள் எதுவும் அடங்கவில்லை - விசேட வைத்திய நிபுணர்கள்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் மனிதனுக்கு ஒவ்வாத சில பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக வெளியான செய்தியில் உன்மதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு விஞ்ஞானபூர்வ பரிசோதனை முடிவுகளும், ஒவ்வாத பதார்த்தங்கள், பால்மாவில் உள்ளடங்கியுள்ளதாக கூறவில்லை என, சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் அனைத்தும், தரமானவையாகும் என்றும் அந்த வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மா வகைகளும் துறைமுகத்தில் வைத்து மாதிரிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அதன் பின்னர் மீண்டும் இராசாயன ஆய்வுகூட பரிசோதனைக்கும் அந்த பால்மா வகைகள் உட்படுத்தப்படுவதுடன், ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் தரச் சான்றிதழும் பெற்றுக் கொள்ளப்படுவதாக, சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில், அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, விசேட வைத்திய நிபுணர்கள் இந்த தகவலை உறுதிபட குறிப்பிட்டனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பால்மா தொடர்பான பிரச்சினை விஞ்ஞானபூர்வமான ஒரு பிரச்சினையே அன்றி, அரசியல் பிரச்சினையல்ல எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பான பிரச்சினையை பற்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தின் போது எந்தவித கருத்தும் வெளியிடவில்லை என்றும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment