கையைக் கட்டிக்கொண்டிருப்பதால், எல்லாமே புஷ்வானமாகி விடும் - எம்.ஏ.சுமந்திரன்.
புதிய அரசமைப்பு சரியான தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துடன், கொண்டு வரப்படும் எனவும், கையைக் கட்டிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பை ஏற்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான முயற்சி, தொடர்ந்து முன்னடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கும் வரைக்கும், அதில் முழுமையாக தம்மை அர்ப்பணிப்பேன் என சுமந்திரன் கூறியுள்ளார்.
அத்துடன் தமது நம்பிக்கை, வழிநடத்தல் குழுவின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், இடைக்கால அறிக்கை, உடன் வெளிவர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசமைப்பு சரியான நேரத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போதைக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கருத்துகளை வைத்து கொண்டு, கணிப்புக்களை மேற்கொள்ள முடியாது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதைவிட மும்முரமாக இந்த வேலைகள் நடைபெறக்கூடும். அதை விடுத்து, கையைக் கட்டிக் கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது.
ஒக்டோபர் சதிப் புரட்சியை பார்த்த போது, மீண்டும் அரசு மாற்றப்படும் என்று, எவரும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, எனினும் அது தலைகீழாக மாற்றப்பட்டமை, அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.
புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் உள்ளன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், அடுத்த நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றலாம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment