சம்பள உயர்வை பெற்று தருமாறு வலியுறுத்தி, பிரித்தானியாவிற்கு மகஜர் - மலையகத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.
1000 ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று, பிரித்தானிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்றைய தினம் மலையகத்தில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது. மலையக இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மக்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரி மிக குறைந்த மட்டத்தில் இருப்பதால், தற்போதய சூழ்நிலைக்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார். சபையின் மாதாந்த அமர்வில் தலைமையேற்று உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
சில பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை செடிகளை தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக, உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேயிலை செடிகளின் பரப்பிற்கு கம்பனிகளால் அறவிடப்படும் வரி, கம்பனிகளால் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட இரண்டு மடங்காக காணப்படுகின்றது. இந்த விடயத்தையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி, கட்டங்கள் அமைத்தலுக்கான அனுமதி மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வரி போன்றவை குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி அவை முறையான உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய பேணப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் தோட்டங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை, மறுபரிசீலனை செய்து முறையான வரி அறவீட்டு முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment