டான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நிலையில், அவ்விடத்திலிந்து வெளியேற்றப்பட்ட சம்பவமானது ஊடக ஒடுக்குமுறையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த காடையர் கும்பலொன்று அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கு தீயூட்டி சேதம் விளைவித்து சென்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது, குற்றப்பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்த , நுழைவதற்கு அனுமதியற்ற அப்பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைய முற்பட்ட டான் ரீவி யின் படப்பிடிப்பாளரினாலேயே குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் காடையர்களின் கோழைச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், ஊடகங்கள் காடையர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சமூக பொறுப்புணர்வுடன் பொலிஸாருக்கு உதவுவதை விடுத்து, கடமைக்கு குந்தகம் விளைவித்தல் கண்டனத்திற்குரியதாகும். யாழ்பாணத்தில் செயற்படும் காடைக்கும்பல்களுடன் தொடர்புகளை பேணிவரும் டாண் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனான குகன் என்பவன் கொள்ளைகள் மற்றும் வன்செயல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளுகின்றபோது, ஊடகவியலாளன் என்ற போர்வையில் அவ்விடத்தினுள் நுழைந்து பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் வேவு பார்த்து குற்றவாளிகளுக்கு தகவல் வழங்குவதாக பரவலாக பேசப்படுகின்றது.
தடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வரை குறித்த பிரதேசம் „குற்றவியல் பிரதேசம், உள்நுழைதல் தடுக்கப்பட்டுள்ளது' என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் பார்வையாளர்களாக சில மீற்றர் தூரங்களுக்கப்பால் அவதானித்துக்கொண்டிருந்தபோது அவ்விடத்திற்கு விரைந்த டாண் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளன் அவ்வீட்டினுள் நுழைய முற்பட்டுள்ளான். அவனை தடுத்து நிறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி முயற்சித்தபோது அவன் உடைத்துகொண்டு உள்ளே நுழைய முயல்கையில் கதவு உராசியதில் உதட்டில் காயமேற்பட்டுள்ளது. அத்துடன் அவனை பின்நோக்கி நகர்த்திய பதில் பொறுப்பதிகாரி விசாரணைகள் முடியும்வரை குற்றப்பிரதேசத்தினுள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கு எனக்கு ஏற்படுகின்ற சந்தேகம் யாதெனில் குறித்த அதிகாரியின் கோழைத்தனமா அன்றில் மனிதாபிமானமா மேற்படி நபரை சர்வ சாதராரணமாக அவ்விடத்திலிருந்து வெளியேற அனுமதித்தது. பொலிஸ் அதிகாரி அவ்விடத்தில் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தான் என குகனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்திருந்தால் இன்று அவருக்கு குற்றவாளிக் கூண்டுக்கு ஏறும் நிலை ஏற்பட்டிராது.
நிலைமை இவ்வாறிருக்கின்றபோது தனது ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ள சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் உடனடியாக குகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் குகன் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்டு. அண்மையில் யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் விஜயகலாவின் அமைச்சரக ஊழியர் என அறியப்படும் நபருடன் இணைந்து பாரிய மோசடி ஒன்றை மேற்கொண்டமை நீதிமன்றில் அம்பலமானது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவன் நீதிமன்றில் கடும் உத்தரவின் பெயரில் பெற்றுக்கொண்ட பணத்தினை பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு வழங்கினான். இருந்தபோதும் அச்செயற்பாட்டினால் குறித்த இளைஞனுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் குறித்த மோசடியுடன் மின்னஞ்சல் ஊடாக வெளிநாடு ஒன்றிலிருந்து உதவிகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கிய முன்னாள் புலி உறுப்பினன் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞனை ஏமாற்றும் பிரதான புள்ளியாக செயற்பட்ட மோசடிப்பேர்வழியான பெண் இன்றுவரை யார் என்பது அடையாளம் காட்டப்படவில்லை. ஊடகம் என்ற போர்வைக்குள் இவர்கள் நுழைந்து நிற்பதால் பொலிஸ் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தயங்குகின்றதா அன்றில் குறித்த ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் பிரத்தியே ஒப்பந்தங்கள் ஏதும் உண்டா என்பது இங்கு எழுப்பப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.
இவை யாவற்றுக்கும் அப்பால் குகன் தனது தந்தையார் காணாமல் போயுள்ளதாக சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளான். குறித்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவனது தகப்பன் மக்களிடம் பல்வேறு தேவைகளுக்காக பணம்பெற்றுவிட்டு அவற்றை திருப்பி கொடுக்காது ஏமாற்றியபோது, கடனாளிகளின் நெருக்குதலிலிருந்து தப்புவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு தகப்பனை ஒழித்து வைத்துள்ளதாக சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இவனுக்கு பொலிஸ் உயர் பீடங்களுடனுள்ள உறவு காரணமாக அந்த மோசடி முறைப்பாடும் கண்டும் காணாது விடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் சிலர் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி இரு மோசடி முறைப்பாடுகளுக்கும் பின்னணியில் இன்னுமோர் நிகழ்சிநிரல் உண்டென சந்தேகிக்கப்படுகின்றது. அதாவது மேற்குலக நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக தனக்கு இலங்கையிலே அச்சுறுத்தல் உண்டென நிரூபிக்கும் நோக்கிலேயே இச்செயற்பாடுகள் அமைந்துள்ளது. எனவே மேற்படி திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளாவிட்டால், மீண்டும் மேற்குலகில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது தடுக்க முடியாது போகும்.
No comments:
Post a Comment