Friday, February 8, 2019

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான வழக்கில் இருந்து விலகினார் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்னாண்டோ மற்றும் இ.ஏ.ஜி.ஏ. அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தமை காரணமாக குறித்த மனுவை பிறிதொரு நாளில் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சரத் என் சில்வா, "சிவில்" ஆடையில் வருகை தந்து சட்டத்தரணி ஆசனத்தில் அமர்ந்தமை தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருதானையில் பேரணி ஒன்றில் உரையாற்றுகையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக சரத் என் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டது. மேலும் சரத் என் சில்வாவின் சட்டத்தரணி தரத்தை நீக்காமல் இருப்பதற்கான காரணத்தை குறிப்பிடுமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதிவாதி இவ்வாறான நடவடிக்கையில் மீண்டும் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com