“ஒற்றுமை பாடசாலை” எனும் வேலைத் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மூவின மாணவர்களையும் இத்திட்டத்தின் ஊடாக இணைத்து, இன நல்லிணக்கத்தை மேம்படுத்தப் போவதாக என்று அவர் கூறினார். நாட்டின் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களை சம அளவில் சேர்த்துக்கொண்டு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் “ஒற்றுமை பாடசாலை” திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் சகல தரப்பினருக்கும் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.
இதுவரை நிறைவு செய்யப்படாத மெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் பிரதமருக்கு ஞாபகப்படுத்தியுள்ளோம். குறைந்தது 600 பேருக்காவது இந்த வருட இறுதிக்குள் மெளலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இரண்டாம்தர கல்வி கற்கின்ற மாணவர்களுக்கும், மூன்றாம்தர கல்விக்கு நுழையவுள்ள மாணவர்களுக்கும் நாட்டிலுள்ள கற்கைநெறிகள் தொடர்பில் போதிய தெளிவில்லாமல் இருக்கிறது. கற்கைநெறிக்கு ஏற்றவாறு பாடங்களை தெரிவுசெய்வதிலும் அவர்களுக்கு போதிய வழிகாட்டால் இல்லாமல் இருக்கின்றன. இதுகுறித்து அவர்களுக்கு பூரண தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும்.
தமது நண்பர்களை பின்பற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் ஒரே விதமான பாடங்களையே தெரிவுசெய்கின்றனர். பின்னர் பல்கலைக்கழக நுழைவு என்று வருகின்றபோது, போதிய இஸட்–புள்ளி இல்லாமல் தடுமாறுகின்றனர். எவ்வாறு இஸட்–புள்ளி இடப்படுகிறது என்பது குறித்து உயர்தர மாணவர்களுக்கு போதிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது.
உயர்தரத்தில் எப்படியான பாடங்களை தெரிவுசெய்வது, தொழில்வாய்ப்புக்கு ஏற்ற மேற்படிப்பு எது என்பது தொடர்பில் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்கவுள்ளோம். மகாபொல நிதியத்தின் மூலம் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக இந்த தொழில் வழிகாட்டல் திட்டத்தை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
பாடசாலை அபிவிருத்திக்கான நிதியை அரசாங்கம் மூலம் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் வருகின்றபோது, செல்வந்தர்கள் கட்டிடங்களை அமைத்துக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்க விடயம் என்றும் அவர் கூறினார்
No comments:
Post a Comment