தமிழ் மாணவர்களின் பாதுகாப்பு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் - பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்த வேலுகுமார்.
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு எழுதிய கடிதத்திலேயே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும், இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுத் தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பிரதமரிடமும்,கல்வி அமைச்சரிடமும் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
தமது கோரிக்கைக்கு உரிய தரப்பிடம் இருந்து பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வேலுகுமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீபாத கல்லூரியின் சமையல் அறை அண்மையில் சீல் வைக்கப்பட்டமை, முறையாக உணவு வழங்காமை, அத்துடன், பதிவாளர் உட்பட சில உத்தியோகத்தர்கள் கல்லூரி அலுவலகத்துக்குள், கடமை நேரத்தில் வைத்து , மதுபானம் அருந்தியமை தொடர்பான காணொளிகள் வெளியானதை அடுத்து, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள், நேற்றும் இன்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை இன்றைய தினம் கல்வியற் கல்லூரிகளின் பணிப்பாளர் எம்.எம்.பண்டார, கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். கல்லூரியில் ஒழுக்கயீனமாக நடந்துகொண்ட பதிவாளர் உள்ளிட்ட சிற்றூழியர்களை இடமாற்றம் செய்வதுடன், அடுத்த கட்டமாக அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக, எம்.எம்.பண்டார கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களிடம் உறுதியளித்ததை அடுத்து, மாணவர்களின் போராட்டம் இன்று கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment