Thursday, February 7, 2019

சம்பள பிரச்சினை குறித்த மனுவொன்று, இளைஞர்களால், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மலையக இளைஞர் அமைப்பினால் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மனுவொன்று கையளிக்கப்பட்டது.

இந்த மனுவில் தற்காலிக நலன் கருதி செய்து கொள்ளப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில், மேலும் சில புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி, கடந்த தினத்தில், கோட்டை புதையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களினால், இந்த மனு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அடிப்படை சம்பளத்திலிருந்து அல்லாமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே ஒதுக்கபட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வேலை தளங்களில் வைத்து தொழிலாளார்கள் சுகவீனமுற்றால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதோடு, பெண் தொழிலாளர்களின் நலன்கள், விஷேட கவனத்தில் கொள்ளப்பட்டு தொழிற்சார் உரிமைகள் பேணப்படுதல் வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது தொழில் பாதுகாப்பும், நலன்களும், சம்பளமும் , விடுமுறையும் கவனத்திற் கொள்ளப்படுவதோடு, தொழிற்லாளர்கள் காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். கழிப்பறைகள் முதலுதவிப் பெட்டிகள் என்பன உரிய இடத்தில் வைக்கபடல் வேண்டும்.

சர்வதேச தேயிலைத் தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்லாது, தொழில் நலன் உரிமைகள் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் எனவும், குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் தலையீட்டுடன், பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என, விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசாங்கத்துடனும், பிரதமருடனும் கலந்துரையாடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என, விசேட இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அலரி மாளிகையில் இடம்பெற்று தோல்வி கண்டது.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை கூறினார். இந்த சந்திப்பு தோல்வியடைந்தாலும், மீண்டும் அரசாங்கத்துடனும், பிரதமருடனும் கலந்துரையாடி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என, விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com