பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள், இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பத்தனை தேசிய கல்வியற் கல்லூரி சமையல் அறையில் சமைக்கப்படும் உணவு, சுத்தமாக சமைக்கப்படாதமையால், அந்த கல்லூரியின் சமையல் அறைக்கு, நேற்றைய தினம் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டு, சமையல் அறையை மேற்பார்வை செய்தனர். இதனை அடுத்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனால் மாணவர்கள், தங்களுக்கான உணவை பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு சுத்தமாக வழங்கப்பட வேண்டுமெனவும், கல்லூரியில் இருந்த அதிகாரிகள் மதுபானம் அருந்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி, இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பத்தனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமனி அபேநாயக்க கருத்து வெளியிடும் போது, இந்த விவகாரத்தில் தாம் தன்னிச்சையான தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என கூறியுள்ளார். இது குறித்து விடயத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரிகளின் ஊடாகவே, நடவடிக்கை எடுக்க முடியும் என, பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமனி அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment