மார்ச் 7 வரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம்
சுகாதார அமைச்சில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்கும் திட்டம் மற்றும் கல்வி அமைச்சினூடாக முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகள் நேற்று பதிவாகியுள்ளன. இவ்வாறு கிடைத்துள்ள முறைபாடுகளுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையின் உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட சிலரினால் பில்லியன் கணக்கான நிதி மோசடி செய்யப்பட்டமை மற்றும் 13,200 லீற்றர் எண்ணைய் பவுசரை வௌியில் கொண்டுசென்று விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடு மற்றும், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை, கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 150 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாட்டாளர்களினால் முறிப்பாடுகளை முன்வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment