Thursday, February 28, 2019

முறிகள் மோசடியில் 6 வகையான கணக்காய்வுகளை மேற்கொள்ள சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமனம்

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் ஆறு வகையான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச கணக்காய்வாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். குறித்த சர்வதேச கணக்காய்வாளர்கள் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை விலைமனு கோரலுக்கான குழுவின் பணிகள், தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் சில வாரங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்வதற்காக சில சர்வதேச கணக்காய்வு சங்கங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் முதல்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட சங்கங்களிலிருந்து தற்போது இறுதிக்கட்டத் தேர்வுகள் இடம்பெறுவதாக மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய வங்கியில் இடம்பெற்றதற்காக கூறப்படும் முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி பகுதியில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சிபாரிசுகளில், பேர்ப்பச்சுவல் ட்ரசரீஷ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும்.

மத்திய வங்கியில் மோசடிகள் இடம்பெற்று முழுமையாக 4 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இது நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடியாக கருத்தப்படுகின்றது. ஆனால் இந்த முறி மோசடியில் ஈடுபட்ட பிரதான குற்றவாளியை ஆட்சியில் உள்ள அரசாங்கம் இன்னும் கைது செய்யாது உள்ளமை பரலரையும் விமர்சனம் கூற வைத்துள்ளது.

எவ்வாறான போதிலும் சுமார் ஒரு வருட காலம் இதனுடன் தொடர்புடைய அர்ஜுன் ஆலோசியஸ் மற்றும் காசும் பலிசேன ஆகியோர் அண்மையில்தான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment