Tuesday, February 5, 2019

கிரானில் உள்ள 5 கிராமங்களை கருணா மூஸ்லிம்களுக்கு தாரைவார்த்த சரித்திரம் கேளீர்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக முதன்முதலில் கிளர்ந்தெழுந்தவர் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியாகவிருந்து இலங்கை அரசுடன் இணைந்து கொண்ட கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

அவ்வாறு அவர் கிளர்ந்தெழுவதற்கு கூறிய காரணம் „முஸ்லிம் ஒருவர் கிழக்கின் ஆளுனரானால் கிழக்கின் காணிகள் மற்றும் வளங்கள் யாவும் பறிபோய்விடும்" என்தாகும். ஆனால் கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது கிரான் பிரதேசத்தில் உள்ள 5 தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளை ஓட்டமாவடியுடன் இணைக்க ஏழுத்துமூலம் ஒப்புதல் தெரிவித்த இருண்ட பக்கத்திற்கு இலங்கைநெட் இன்று வெளிச்சம் போட்டு காட்டவுள்ளது. அவ்வாறு வெளிச்சம் போடுவதற்கான காரணம் வேறு ஒன்றும் அல்ல எமது அரசியல்வாதிகள் திறந்தவெளியில் தமிழ் தேசியம் பேசி தங்களை தேசத்தின் காவலர்களாக காண்பித்துக்கொண்டு திரை மறைவில் மேற்கொள்ளும் காட்டிக்கொடுப்புக்களை மக்கள் அறியவேண்டும் என்பதாகும்.

2012ம் மேற்படி 5 கிராம சேவகர் பிரிவுகளையும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் மட்டக்களப்பிற்கு புதிதாக அரச அதிபராக கடமையேற்றிருந்த திருமதி சார்ள்ஸ் உடன் இணைந்து அரச உத்தியோகித்தர்கள் அந்த இணைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தாமதித்து வந்துள்ளனர். வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அமீர் அலி யால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து உயர் மட்ட அதிகாரிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் என்ற மக்களின் விருப்பை எடுத்துரைத்துள்ளார் திருமதி சார்ள்ஸ். அத்துடன் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் ஓட்டமாவடியுடன் இணையும்போது அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களையும் விளக்கியதுடன் குறித்த பிரதேசமானது பிரதி அமைச்சர் கருணாவின் பிறப்பிடம் என்பதால் கருணா நிச்சயமாக உடன்பட மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு திருமதி சார்ள்ஸ் தெரிவித்திருந்தற்கான காரணம், கருணா அரசின் பலமிக்கவராக இருக்கும்போது, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உயரதிகாரிகள் சற்று அஞ்சலாம் என்ற எதிர்பார்பிலாகும்.

அத்தருணத்தில் தனது கோப்பிலிருந்த கடிதம் ஒன்றை எடுத்து மேசையிலெறிந்த உள் நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டலலாகே, இதோ கருணாவின் ஒப்புதல் என்றுள்ளார். கடிதத்தை சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் வாசித்தபோது, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராவிருந்த கருணா குறித்த கிராமங்களை ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு விருப்பு தெரிவித்திருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் இவ்விணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் தமது நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு திரும்பியுள்ளனர்.

எமது அரசியல்வாதிகளும் முன்னாள் புலிகள் உட்பட்ட ஆயுத்குழுக்களும் தமிழ் மக்களை விலைகூறி அடிமாட்டுக்கி எவ்வாறு விற்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ஆனால் குறித்த கிராமங்கள் ஓட்டமாவடியுடன் இணைக்கப்பட்டமை தொடர்பில் இன்றும் அரசியல் மேடைகளில் முழக்கமிட்டு வாக்கு பிச்சை எடுக்கப்படுவதை நாம் அவதானிக்கின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com